சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள்.
இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுன் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.
சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். பல சித்திகளை, குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள். அஷ்ட என்றால் எட்டு என்று பொருள்.
அட்டாங்க யோகம் என்னும் எட்டு வகையான யோக நெறிகளை பற்றி வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவை, அணிமா, மகிமா, லகிமா, பிரார்த்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம், கரிமா.
பல சித்தர்கள் இருந்தாலும் 18 சித்தர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள், அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்த்ரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பை சித்தர், மச்சமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, இராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர்கள்.
“சித்த மயம் சிவமயம்” என்பார்கள். சிவனே முதன்மை சித்தாராக கருதப்படுபவர்.
அகத்தியர் பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார் அகத்தியர். இவரது குரு சிவபெருமான். சித்தர்களுக்கெல்லாம் தலைவர் என அறியப்படுகிறார். தமிழ் சித்த மருத்துவமுறைகளை இந்த உலகிற்கு அளித்த மகான். கடுமையான தவத்தின் வாயிலாக பல சித்திகளை பெற்றவர். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர்.
போகர் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவிலும், சீனாவிலும் வாழ்ந்துள்ளதாக புத்தகங்களில் உள்ளது. நவபாஷாணங்களைக் கொண்டு முருகப்பெருமானின் திருவுருவ சிலையைச் செய்தவர் போகரே. இவரது குரு அகத்தியர். வைத்தியம் மற்றும் வேதியியலில் சிறந்து விளங்கியவர். இறுதியாக பழனி மலையில் சமாதியடைந்தார்
திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்கிறார் திருமூலர். இவரது குரு நந்தி தேவர். மூலன் என்ற இடையனின் உடலினுள் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற வீதத்தில் 3000 பாடல்களை பாடி திருமந்திரம் எனும் நூலை இயற்றினார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி கொண்டார்.
வான்மீகர் வான்மீகர் நாரத முனிவரின் சீடராவார். இராமயாண இதிகாசம் எனும் பெரும் நூலை வழங்கியவர். திருவையாறு, எட்டுக்குடி எனும் ஊரில் சமாதியடைந்தார்.
தன்வந்த்ரி காக்கும் கடவுள் திருமாலின் அம்சமாக போற்றப்படுகிறார் தன்வந்த்ரி. ஆயுர்வேத மருத்துவ முறையை இவ்வுலகுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோயிலில் சமாதி அடைந்துள்ளார்.
இடைக்காடர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது குரு போகர், கருவூரார். இவரது பாடல்கள் உலக இயல்புகளை, நிலையாமையை உணர்ந்து இறைவனை எப்படி அடைவது என்பதை சொல்கிறது. தாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினை காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தியடைந்தார்.
கமலமுனி போகரிடம் சீடராய் இருந்து யோகம் பயின்று சித்தர்களில் ஒருவரானவர். இவரது குருக்கள் போகர், கருவூரார். ‘கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளதாக தெரிகின்றது. ஆரூரில் சமாதியடைந்துள்ளார்.
கருவூரார் தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் காரணமாக இருந்தவர் கருவூரார். இவர் போகரின் சீடர். கருவூரார் பூசா விதி எனும் நூலை எழுதியுள்ளார். கரூரில் சமாதியடைந்துள்ளார்.
கொங்கணர் போகரின் சீடர். பல மகான்களை சந்தித்து ஞானம் பெற்றவர். கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் என பல நூல்களை இவ்வுலகுக்கு வழங்கியுள்ளார். திருப்பதியில் சமாதியடைந்துள்ளார்.
கோரக்கர் கோரக்கரின் குருக்கள் தத்தாத்ரேயர், மச்சமுனி, அல்லமா பிரபு ஆகியோர். மச்சமுனி அருளால் கோசாலையில் இருந்து அவரித்தவர். அல்லமாத் தேவரிடம் போட்டியிட்டு தன்னைவிட மிஞ்சியவர் என்பதை உணர்ந்து அல்லாமாத் தேவரிடம் அருள் உபதேசம் பெற்றவர். போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார்.
குதம்பை சித்தர் அழுகுணி சித்தரின் சீடர் இவர். இவரது பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என அழைத்து பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களி தமக்குத் தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு பெற்றது. மாயவரத்தில் சமாதியடைந்துள்ளார்.
மச்சமுனி மச்சமுனியின் குருக்கள் அகத்தியர், பிண்ணாக்கீசர், பசுண்டர் ஆவர். பிண்ணாக்கீசரிடம் சீடராக இருந்து உபதேசம் பெற்றவர். ஹத யோகம், தந்திர யோகம் குறித்த நூல்களை எழுதியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்துள்ளார்.
பாம்பாட்டி சித்தர் இவரது குரு சட்டைமுனி. ‘ஆடு பாம்பே’ என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் பாடியதால் பாம்பாட்டி சித்தர் என அழைக்கப்படுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். மருதமலையில் சமாதியடைந்துள்ளார்.
பதஞ்சலி ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்தவர். குரு நந்தி. வியாக்ர பாதருடன் தில்லையில் இருந்து சிவதாண்டவம் கண்டார். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் அற்புதமான நூலை இயற்றியுள்ளார். ராமேஸ்வரத்தில் சமாதியடைந்துள்ளார்.
இராமத்தேவர் புலஸ்தியர், கருவூரார் ஆகியோர்களின் சீடர் இவர். இஸ்லாமிய மதக்கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கடைப்பிடிக்கலானார். அங்கு, யாக்கோபு என அழைக்கப்பட்டார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆத்ம தரிசனம் கண்டார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர் இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாதரை வணங்கி, தாம் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார். அழகர் மலையில் சமாதியடைந்தார்.
சட்டைமுனி இவர் போகரின் சீடராவார். சிங்கள நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. வேதியியலில் சிறந்து விளங்கியவர். வேதியியல் தொடர்பான வாத காவியம் எனும் நூலை இயற்றியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் சமாதியடைந்துள்ளார்.
சிவவாக்கியர் சிவசிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்படுகிறார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றிய பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் சமாதியடைந்துள்ளார். இவர் வாழ்ந்த காலம் தெளிவாய் தெரியவில்லை.
சுந்தரானந்தர் சட்டைமுனியின் சீடர். அகத்தியர் பூஜித்த சிவலிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர். ஜோதிடம் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர். அது தொடர்பான பல நூல்களை இயற்றியுள்ளார். மதுரையில் சமாதியடைந்துள்ளார்.
இவர்கள் எல்லாம் பல நூறாண்டுங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு சித்தருக்கும் ஒரு மூல மந்திரம் உள்ளது. சித்தர்களின் மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவர் தம் பரிபூரண அருளை நாம் பெற இயலும்.
அது மட்டுமன்றி சித்தர்கள் சமாதி சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு.
Leave a comment